Thursday, 7 July 2011

மனித மூளை

மனித மூளை

மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.


அமைப்பு

வயதுக்கு வந்த ஒரு ஆணின் மூளையின் கிடைமட்ட வெட்டு தோற்றம்; பெருமூளைப் புறணி (cerebral cortex) பகுதியையும் அதற்கு கீழ் இருக்கும் வெண்பொருள் (white matter)பகுதியையும் காணலாம்.

மாந்தரில் ஒரு சராசரி ஆணின் மூளை சுமார் 1.5 கிலோகிராம் எடையும்,  1260 கன சென்டிமீட்டர் அளவும் உடையது. பெண்ணின் மூளை சுமார் 1130 கன சென்டிமீட்டர் (cc) அளவுடையது. மனிதன் உயிருடன் இருக்கும்போது, மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உள்நிறை மஞ்சள், வெள்ளை நிறமாகவும் காணப்படுகிறது. வலது புறத்தில் உள்ள புகைப்படத்தில் மூளையின் நடுவில் கிடைமட்ட குறுக்குவெட்டு தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் பெருமூளைப் புறணியையும் (மடிப்புகள் நிறைந்த பகுதி) வெண்பொருளையும் காணலாம். கோடிக்கணக்கான மயலின் உடைய நரம்பிழைகள் (myelinated fibre) வெண்பொருளையும், பெருமூளைப் புறணியையும் இணைக்கின்றன. 20 வயதான ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர்.

மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை பெருமூளை அரைக்கோளங்கள் (cerebral hemispheres) என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி.[6] பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி மூளைத்தண்டு என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி சிறுமூளை (cerebellum) என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிறது. மற்ற பாலூட்டி இனங்களிலும் காணப்படும் சிறுமூளை, மூளையின் சிறிய பகுதிகளில் ஒன்று. மேலும், பொதுவான விதியாக ஓர் உயிரினத்தின் சிறுமூளை எவ்வளவு சிறிதாக உள்ளதோ, அதே அளவு அதன் பெருமூளைப் புறணி பகுதி குறைந்த மடிப்புகளை கொண்டதாக இருக்கும். [எலி], சுண்டெலியின்  பெருமூளைப் புறணி பகுதி மடிப்புக்களே இன்றி வழுவழுப்பான பகுதியாக இருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். பாலூட்டிகளில் மிகப்பெரியதான திமிங்கலமும், ஓங்கிலும் (dolphin) மனிதனை விட மிக அதிகமான மடிப்புகளைப் பெருமூளைப் புறணிப் பகுதியில் கொண்டுள்ளன.
 
மனித மூளையின் சிறப்பு வேறுபாடு மிகப் பெரிய அளவிலான பெருமூளைப் புறணிப் பகுதியாகும். மனிதனில் மிகப்பெரிதாக இருப்பதால் அது மூளையின் ஏனைய பகுதிகளை முழுவதும் மறைத்தவாறு காணப்படுகிறது. மனிதனின் சிறுமூளை மற்ற பாலூட்டிகளை விட அளவில் பெரியது. மனிதனின் பெருமூளைப் புறணி அளவில் மட்டுமல்லாது மூளையின் செயல் பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு எலியின் பெருமூளைப் புறணிப் பகுதி அறுவை முறையில் அகற்றப்பட்ட நிலையிலும், அவ்வுயிரினத்தால் நடக்கவும், உண்ணவும், வெளிப்புற மாற்றங்களை உணரவும் இயலும். ஆனால் பெருமூளைப் புறணி பாதிப்படைந்த நிலையில் உள்ள ஓர் மனிதன், 
நிரந்தர ஆழ்மயக்க (coma) நிலைக்கு உட்படுவான்.
(நன்றி : விக்கிப்பீடியா)

மணி துளிகள்

விருந்தினர்கள்